● எல். கவிதா, போரூர்.
எனது கணவர் லட்சுமணனும் அவர் அண்ணன் ராமரும் இரட்டைப்பிறவிகள். கடந்த 2019, செப்டம்பர் 26-ல் கேன்சர் நோயால் அண்ணன் இயற்கை எய்தினார். மாமியார் மே 22-ல் காலமானார். 14-12-2019 "பாலஜோதிடம்' படித்தவுடன் எனது பயம் மிகவும் அதிகமானது. எனது கடையில் "பாலஜோதிடம்' விற்பனை செய்கிறேன். எனக்கு நல்ல ஆலோ சனை கூறவும். என் வாழ்க்கைக்கு வழிகாட்டவும்.
லட்சுமணன் ரிஷப ராசி, மீன லக்னம். ரிஷப ராசிக்கு 2020 டிசம்பர்வரை அட்டமச் சனி நடக்கிறது. அத்துடன் சனி தசையும், அதில் சுக்கிர புக்தியும் நடக்கிறது. ஜாத கத்தில் சனி, நீச ராசியில் இருக்கிறார். பொது வாக இரட்டைப் பிறவிகளுக்கு கிரக நிலை களும் தசாபுக்திகளும் ஒன்றாகத்தான் இருக்கும். அதேசமயம் ஒருவருக்கு நல்லது நடந்தாலோ கெட்டது நடந்தாலோ மற்றவருக்கும் அதேமாதிரிதான் நடக்குமென்று பயப்பட வேண்டாம். திருவாங்கூரில் இரட்டை சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் உருவ ஒற்றுமையில் ஒரேமாதிரி இருப்பார்கள். ஒரே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்கள். இருவரும் ஆர்ட்டிஸ்ட்! ஒருவர் பேசி முடித்ததும் மற்றவர் அதன் தொடர்ச்சியாகப் பேசி நிறைவுசெய்வார். இருவரில் ஒருவர் இறந்து விட்டார். மற்றவருக்கு பயம் வந்துவிட்டது. ஆனாலும் அவர் சுமார் பத்தாண்டுகள்வரை உயிரோடு இருந்தார். இது உண்மை வரலாறு. அதனால் அண்ணன் ராமர் இறந்ததால் தம்பி லட்சுமணனின் உயிருக்குத் தீங்குவரு மென்று பயப்படவேண்டாம். உங்கள் மாமியார் மறைந்த துக்கம் உங்கள் கணவரின் அண்ணனை அதிகம் பாதித்துள்ளது. அட்டமச்சனியும் வேறு! பங்காளித்தீட்டு ஆறுமாதம். (சிலர் மூன்று மாதம் என்பார்கள்). மேற்கண்ட காலம் முடிந்ததும் சென்னையில் பம்மல் அருகே பொழிச்சலூர் சென்று அகத்தீஸ்வரர் கோவிலில் ஒரு அபிஷேக பூஜை செய்யவும். (அது வடதிருநள்ளாறு எனப்படும்.) ஒருவருடம் முடிந்தபிறகு தன்வந்தரி ஹோமம், ஆயுஷ்ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளவும். லட்சுமணனுக்கு தீர்க்காயுள் உண்டு. மகன் இராமபாலனுக்கு மகர ராசி. ஏழரைச்சனி, ராகு தசை நடக்கிறது. பெரியப்பா இறந்த தீட்டு மூன்று மாதம் முடிந்ததும் காலபைரவர் சந்நிதியில் 19 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமை தோறும் தொடர்ந்து நெய்யில் மிளகுப் பொட்டலத்தை இட்டு தீபமேற்றவும். பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிக்கவையுங்கள். மகள் சாதனா சிம்ம ராசி. சூரிய தசை. தொடர்ந்து படித்து பி.ஈ., பட்டம் வாங்கிவிடுவாள். 2026-ல் அட்டமச்சனி வரும். அதற்குள் படிப்பு முடியும்.
● திருமதி. வசந்தி ராகவன், விருகம்பாக்கம்.
என் உறவினர் மகளுக்குத் திருமணத்தேதி 23-8-2020 என குறித்துள்ளார்கள். நீஙகள் 4, 5, 7, 8 தேதிகளில் திருமணம் கூடாது என எழுதிவருகிறீர்கள். தவிர்க்கமுடியாத காரணத் தால் அந்த தேதியை மாற்றமுடியாது என்கி றார்கள். அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரங்களில் ரோகிணி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, அஸ்வினி, புனர் பூசம், பூசம், சித்திரை, அவிட்டம், சதயம் ஆகியவற்றில் திருமணம் செய்யலாமென்று பஞ்சாங்கத்தில் குறிக்கப் பட்டுள்ளது. 5- என்பது புதன் நட்சத்திரம். அதை ஏன் விலக்க வேண்டும்?
4, 5, 7, 8 தேதிகளில் திருமணம் செய்தவர்கள் பாதிப்படைந்திருக் கிறார்கள். மணவாழ்க்கையில் மகிழ்ச் சியை இழந்திருக்கிறார்கள் என்று பல அனுபவம் கூறும் உண்மை! சுருதி, யுக்தி, அனுபவம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எண்கணிதம் என்பது ஆங்கிலேயர் காலத்தில்தான் வந்ததென்று நினைக் காதீர்கள். "ஸீரோ' என்ற மேதைதான் எண்கணிதத்துக்கு உயிரூட்டியவர். அடுத்து, தமிழ்நாட்டில் பண்டிட் சேதுராமன் (1960-ல்) அதைத் தெளிவு படுத்தினார். "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு' என்று இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே வள்ளுவர் கூறிவிட்டார். அங்கேயே "நியூம ராலஜி' புகுந்துவிட்டது. என்னு டைய அனுபவத்தில் அரசியலிலும், பொதுவாழ்விலும், கலைத்துறை யிலும் பலருக்கு எண்கணிதப்படி பெயர் மாற்றம் செய்து அவர்கள் பேரும் புகழும் பொருளும் பெற்று சீரும் சிறப்புமாக உள்ளார்கள். செல்லப்பா (தென்காசி) என்பவர் "மிஸ்டிக் செல்வம்' என்று பெயர் மாற்றிப் புகழ்பெற்றார். எனக்கு நெருங்கிய நண்பர். கோவை டாரட் ஆனந்தன்- ஆனந்தவேல் என்று மாற்றி கோடீசுவரனாகிவிட்டார். சின்னத்திரையில் ("நாம் இருவர் நமக்கு இருவர்', "மௌனராகம்' டைரக்டர்) செல்வாவை "தாய் செல்வம்' என்று மாற்றிவைத்து ஓஹோ என்று புகழ்பெற்று வாழ்கிறார். இன்னும் எத்தனையோ உதாரணம் உண்டு. அவ்வளவு ஏன்- என் குருநாதர் பள்ளத்தூர் அய்யா அவர்கள் எனக்கு "ஜோதிடபானு' என்று பட்டம் கொடுத்தார். (எண்கணிதப்படி 37). அதுமுதல் பத்திரிகை உலகில் பிரபலம் ஆனேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஒரு இந்து- ஒரு முஸ்லிம்- ஒரு கிறிஸ்துவர் ஆகிய மூவருக்கும் (தி.மு.க. கட்சிக்காரர்கள்) கலைஞர் ஒரே நாளில் திருமணம் நடத்திவைத்தார். அந்தத் திருமணத் தேதியின் கூட்டு எண் 8. அவர்கள் மூவரின் மணவாழ்க்கையும் மகிழ்ச்சியற்றதாக முடிந்தது. அடியேன் எழுதும் கருத்துகள் அனைத்தும் அனுபவரீதியான உண்மைகள்! ஆதாரங்கள்!
● எம். வேல்முருகன், குமரமங்கலம்.
நான் திருக்கணிதப்படி கணித்த ஜாதகங்களின் பலன்கள் நடை முறைக்கு சம்பந்தமில்லாமல் இருந்தன. வாக்கியக் கணிதமே சிறந்தது என்று நீங்கள் குறிப்பிட்டதால், ஈரோடு ராசி புக் சென்டரில் வாக்கியக் கணித சாப்ட்வேர் வாங்கியும், ஐ.சி.எஸ். நிறுவனத்தில் மொபைல் சாப்ட்வேர் வாங்கியும் கணித்துப் பலன் சொல்லிவருகிறேன். சரியாகவே அமைகிறது. ஆனால் ஆதித்திய குருஜி திருக்கணிதமே சிறப் பானது என்கிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது!
இதில் குழப்பத்துக்கே அவசியமில்லை. நோயாளி நோய்தீர வைத்தியரை நாடு கிறார். பிரச்சினைகளில் சிக்கியோர் அவை தீர ஜோதிடர்களை நாடுகிறார்கள். வைத் தியத்தில் அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி என்றிருப்பது போல, ஜோதிடத்தில் திருக்கணிதம், வாக்கியம் என்ற இரண்டு அமைப்புண்டு. யாருக்கு எது அனுபவரீதியாக சரிவருகிறதோ அதைக் கடைப்பிடிக்கலாம். எனது அனுபவம்- வாக்கியப் பஞ்சாங்கப்படியே 100-க்கு 100 தீர்வாகிறது. உங்கள் அனுபவம் எப்படி? நமது குறிக்கோள்- பிரச்சினை தீரவேண்டும். நோய் நிவர்த்தியானால் கைராசியான டாக்டர். பிரச்சினை தீர்வானால் நல்ல ஜோதிடர்.
● கனகராஜ், தேவாரம்.
பொதுவாக பங்காளித்தீட்டு, குடும் பத்தில் முக்கியமானவர்கள் இறந்த தீட்டு, பெண் பிள்ளைகள் பருவமடைந்த ருது தீட்டு அல்லது பேறுகாலத் தீட்டு போன்றவையெல்லாம் எவ்வளவு காலம் இருக்கும்?
பேறுகாலத் தீட்டு- ருதுமங்களத் தீட்டு போன்றவை 30 நாள்; பிறகு தோஷமில்லை. இறந்த தீட்டு அப்பா- அம்மாவுக்கு ஒருவருடம்; பங்காளித்தீட்டு ஆறுமாதம்; மனைவி இறந்த தீட்டு மூன்று மாதம்வரை உண்டு. மேற்படித் தீட்டுக்காலம் முடியும்வரை சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது திருப்பதி, சபரிமலை போன்ற மலைக்கோவில்களுக்குப் போகக்கூடாது 30 நாள் முடிந்ததும் வீட்டில் தீபமேற்றலாம். (தொழில் தர்மத்துக்கு விதிவிலக்கு உண்டு. அதாவது மலைக்கோவிலில் பணியாற்றுபவர்கள், வியாபாரம் செய்வோர் போன்றவர்களுக்கு விதிவிலக்கு.)
● எஸ்.எஸ். நாராயணன், கோவை.
என் மகன் கார்த்திக் திருமணம்- நீங்கள் பொருத்தம் பார்த்த பெண் கோமதியுடன் நிகழ்ந்தது. திருமணத்துக்குப்பிறகு பையனுக்கு வேலை- வருமான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எப்போது அமையும்?
மகன் கார்த்திக் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். மருமகள் கோமதி பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். இருவரும் ஒரே ராசி- ஒரே லக்னம். ஒரே யோனி (மகம், பூரம்- எலி) மிகமிகச் சிறப்பு. இருவருக்கும் நல்ல ஒற்றுமையும், மனம் நிறைவான மணவாழ்க்கையும், விரைவில் வாரிசுயோகமும் அமையும். பெண்ணுக்கு 2033 வரை ராகு தசை! மகனுக்கு சந்திர தசையில் 29-4-2019 முதல் ராகு புக்தி- ஒன்றரை வருடம்- 22-10-2020 வரை. அதனால் சம ராகு தோஷம். இந்த தோஷம் விலக சூலினிதுர்க்கா ஹோமம் செய்து மகனும் மருமகளும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். ஆனால் ஜாதகக் கோட்சாரக் கிரக அமைப்புப்படி, மேற்படி ஹோமம் செய்ய ஏதாவது தடை ஏற்படலாம். அல்லது பங்காளித்தீட்டு போன்ற சங்கடமும் தடையும் ஏற்படலாம். கோவிலுக்குப் போய் அர்ச்சனை, பூஜை செய்யவும்கூட தீட்டு ஏற்படலாம்; தடை ஏற்படலாம். தீட்டுக்காலம் முடிந்ததும் வடக்குப் பார்த்த அம்மனுக்கு நெய்தீபமேற்றி, மாலை சாற்றி பூஜை செய்யலாம். கோவை அவினாசி அருகில் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் போய் வழிபடலாம். அது சித்தர் கோவில் என்பதால் அதற்கு எந்தத் தீட்டும் இல்லை.